×

தாயை இழந்து சுற்றி திரியும் இரண்டரைமாத குட்டியானையை முதுமலை தம்பதியினர் வளர்க்க உள்ளனர்: வனத்துறை தகவல்

கிருஷ்ணகிரி: தாயை இழந்து சுற்றி திரியும் இரண்டரைமாத குட்டியானையை முதுமலை தம்பதியினர் வளர்க்க உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. தருமபுரியில் திரியும் குட்டி யானை இன்று இரவு தெப்பக்காடு முகாமிற்கு கொண்டுவரப்படும். மின்வேலியில் சிக்கி தாய் யானை இறந்த இடத்தில் சுற்றி திரிந்த 2 யானைகளில் ஒன்று வனப்பகுதிக்கு சென்றதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேசன் தெரிவித்தார்.  

வனங்களில் தாயை பிரிந்து மீட்கப்படும் யானை குட்டிகள், குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து தொந்தரவு செய்யும் காட்டு யானைகள் போன்றவை பிடிக்கப்பட்டு இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இங்கு 23 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளை பழங்குடியினத்தை சேர்ந்த பாகன்கள் பராமரித்து வருகின்றனர். இதில் காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாகப் பணிபுரிகின்றனர்.

கடந்த 2017ல் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயிடம் இருந்து பிரிந்து காயத்துடன் சுற்றித்திரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் குட்டி யானை, முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு வரப்பட்டு, ரகு என்று பெயரிடப்பட்டது. அதுபோல், சத்தியமங்கலம் பகுதியில் 2018ம் ஆண்டு தாயைப் பிரிந்த மற்றொரு யானை அம்முவும் பராமரிக்கப்படுகிறது.

தாயைப் பிரிந்து தவித்த 2 யானை குட்டிகளைப் பராமரிக்கும் பணியை பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியிடம் ஒப்படைத்தனர். இத்தம்பதி இரு குட்டிகளுக்கு தாய், தந்தையாக மாறி வளர்த்து ஆளாக்கினர். அவர்களின் கதையை ஊட்டியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் கார்த்திக் கொன்சால்வ்ஸ், இரு வருடங்களாக ஆவணப் படமாக்கி இயக்கியனார்.

‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த ஆவண குறும்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்த ஆவண குறும்படம் 95வது ஆஸ்கர் விருதுக்கான ஆவண குறும்பட பிரிவுக்கு தேர்வானது. இந்த நிலையில் அமெரிக்காவில் இன்று நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் வென்றது.

இந்நிலையில் தாயை இழந்து சுற்றி திரியும் இரண்டரை மாத குட்டி யானையை முதுமலை தம்பதியினர் வளர்க்க உள்ளனர். மின்வேலியில் சிக்கி தாய் யானை இறந்த இடத்தில் திரியும் குட்டியானை இன்று இரவு தெப்பக்காடு முகாமிற்கு கொண்டுவரப்படும் எனவும் மின்வேலியில் சிக்கி தாய் யானை இறந்த இடத்தில் சுற்றி திரிந்த 2 யானைகளில் ஒன்று வனப்பகுதிக்கு சென்றதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேசன் தெரிவித்தார்.


Tags : kutyana , Mudumalai couple to raise two-and-a-half-month-old cub who lost its mother: Forest Department Information
× RELATED தாயை இழந்து சுற்றி திரியும்...